Sani Peyarchi Palan 2024: வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்; வாரிச் சுருட்டப்போகும் ராசிக்காரர்கள்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் ஐப்பசி மாதம் 29ஆம் தேதி அதாவது நவம்பர் 15ஆம் தேதியன்று முடிவுக்கு வரப்போகிறது. நேர்கதிக்கு திரும்பும் சனிபகவான் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரைக்கும் குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்தில் பயணம் செய்வார். சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் தீபாவளிக்குப் பிறகு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனியை பார்த்துப் பயம்:
பொதுவாகவே சனிபகவான் என்றால் பலருக்கும் பயம்தான். ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி என்று மனித வாழ்க்கையில் 15 ஆண்டுக் காலம் பாடாய் படுத்தி விடுவார். சனிபகவான் ராசி மண்டலத்தைச் சுற்றி வர 30 ஆண்டுக் காலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்களும் இல்லை 30 ஆண்டுக் காலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்று சொல்வார்கள்.

சனியால் யாருக்கு பாதிப்பு வராது:
நல்லது செய்பவர்களை நல்ல மனம் கொண்டவர்களைச் சனிபகவான் எதுவும் செய்யமாட்டார். காகங்களுக்குச் சாதம் வைப்பவர்கள், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்துப் பித்ரு கடன்களைத் தவறாது செய்பவர்களுக்குச் சனிபகவான் நல்லது செய்வார். தினந்தோறும் சிவ பூஜை செய்பவர்கள், அனுமனை வணங்குபவர்கள், பைரவ பூஜை செய்பவர்களுக்குச் சனியால் பாதிப்பு ஏற்படாது. சுத்தத்தோடும், சுகாதாரமாகவும் இருப்பவர்களுக்குச் சனியால் பாதிப்பு ஏற்படாது. நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு சனிபகவான் நன்மை செய்வார்.

தீயவர்களுக்கு படிப்பினை தரும் சனி:
தீய எண்ணம் கொண்டவர்களின் தலையில் தட்டி அமரவைப்பார் சனிபகவான். குப்பைகள் நிறைந்த இடம், தலைவிரி கோலமாக இருப்பவர்கள். அசுத்தமானவர்கள், இருள் சூழ்ந்த இடம், கெட்ட வார்த்தைகள் அமங்கல சொற்களைப் பேசுபவர்களைக் கண்டால சனிபகவான் பிடித்துக்கொள்வார். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிப்பார் சனிபகவான். மாற்றான் மனைவியை அபகரிக்க நினைப்பவர்களைச் சனி கடுமையாகத் தண்டிப்பார்.

சனி வக்ர நிவர்த்தி:
சனி பகவான் கால புருஷ தத்துவப்படி தற்போது 11ஆம் வீடான லாப வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஆனி மாதம் 15 ஆம் தேதி ஜூன் 29ஆம் தேதி முதல் வக்ர நிலைக்குச் சென்ற சனிபகவான் வரும் ஐப்பசி 29ஆம் தேதி நவம்பர் 15ஆம் தேதிவரைக்கும் மெதுவாகப் பயணம் செய்வார். அதன்பிறகு நேர்கதிக்கு திரும்புவார் சனி பகவான். சனியின் வக்ர முடிவினால் இதுவரை பாதிப்பு நிலையில் இருந்த சில ராசிக்காரர்களுக்கு மீண்டும் பாசிட்டிவ் ஆன செயல்கள் நடைபெறும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு என்னவாகும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தீபாவளிக்குப் பிறகு விலகப்போகிறது. திருமணத்திற்கு வரன் பார்க்கலாம் தடைகள் நீங்கி நடைபெறும். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட பகை விலகும். பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. கொட்டப்போகும் பணத்தை வாரிச் சுருட்டப்போகிறார்கள்.

விருச்சிக ராசி கவனம் தேவை:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலமாக உள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அதே போல அஷ்டம சனியாக உள்ள கடக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் நிதானத்தோடும் இருக்க வேண்டும். அதே போலச் சிம்ம ராசிக்காரர்கள் கண்டச்சனி காலம் என்பதால் பயணங்களில் நிதானம் தேவை. புதிய வேலைக்கு முயற்சி செய்யும் பொறுமையோடு நன்கு விசாரித்துச் சேருவது நல்லது. அதே போல மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி காலத்தின் எபெக்ட் முழு வேகத்தோடு செயல்படும் என்பதால் பொறுமை அவசியம். தொழில் முதலீடுகளில் அகலக்கால் வைக்காதீர்கள். சனி பகவானை சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *