
நடிகர் விஷாலை தொடர்ந்து தன்னுடைய படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்ததாகச் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் திரையிட மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதற்கான வங்கி கணக்குப் பரிவர்த்தனை மற்றும் ஆடியோ ஆதாரங்களை விஷால் வெளியிட்டிருந்தார். இது இந்திய அளவில் சர்ச்சையானது.
விஷால் வீடியோ வெளியானதை தொடந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், விஷால் முன்வைத்துள்ள ஊழல் தொடர்பாக விசாரிக்க மும்பைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் விசாரிப்பார் என்று கூறப்பட்டிருந்தது.
மும்பை சென்சார் போர்டின் மீது விஷால் அளித்த புகாரும், அதற்கு அதிரடியாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையும் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தானும் லஞ்சம் கொடுத்ததாகக் கூறி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சேலத்தில் பேசிய சமுத்திரக்கனி, தனது தயாரிப்பில் திரைக்கு வந்த அப்பா படத்திற்கு வரிவிலக்கு பெற அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறியுள்ளார். அப்பா போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை எடுத்தும், அதற்கு வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுத்தது வருத்தம் அளிப்பதாகவும் சமுத்திரக்கனி பேசியிருந்தார். விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனியும் லஞ்சம் கொடுத்ததாகக் கூறியுள்ளது தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


