
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தில் சென்னையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி இரும்புத் தகடு ரோல்கள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அடரியைச் சேர்ந்த இளைஞர்கள் குட்டி, மதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெங்களூருக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களின் இருசக்கர வாகனம் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியில் மோதியது. இதில் விஜய் உடல் நைந்து உயிரிழந்தார்.மதி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்தார். மதியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் கண்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

