Sabarimalai : தங்கம் கடத்தலில் மீண்டும் புதியதாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கில் கருத்துக் கூறியுள்ள கேரள உயர்நீதிமன்றம், வெளிநாடுகளுக்குத் தங்கச் சிலைகள் கடத்த முயற்சி நடைபெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை மேற்கூரைக்கும், வாயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கும் தங்கமுலாம் பூசிய தகடுகளைப் பதிப்பதற்காக 1998ஆம் ஆண்டு தொழிலதிபர் விஜய்மல்லையா 30 கிலோ தங்கம் வழங்கினார்.

இந்த நிலையில் தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலகர் சிலைகள் நிறம் மங்கியதாகக் கூறி 2019ஆம் ஆண்டு உன்னிக்கிருஷ்ணன் போற்றி என்பவரின் தலைமையில் பெங்களூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதில் சுமார் ஒன்றரைக் கிலோ தங்கம் மாயமானது குறித்துக் கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதேபோல் தேவசம்போர்டு இலஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை மேற்கொண்டது. சிறப்பு விசாரணைக் குழுவினரும் இலஞ்ச ஒழிப்புத்துறையினரும் தங்கள் அறிக்கைகளை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.

சபரிமலையில் 2018 முதலான அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், சிலைக் கடத்தல்காரர் சுபாஷ்கபூருக்குத் தங்கக் கொள்ளையில் தொடர்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஐயப்பனுக்குச் சொந்தமான சொத்துக்களைக் காக்கவே தேவசம்போர்டு நிர்வாகம் உள்ளது எனவும், அந்தப் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *