Bihar : முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த மக்கள்.!

Advertisements

பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முற்பகல் பதினொரு மணி நிலவரப்படி 28 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. பீகார் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக இன்று 18 மாவட்டங்களில் பரவியுள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் பாட்னாவின் பக்தியார்பூரில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் நித்யானந்த ராய், தன் மனைவியுடன் சென்று ஹாஜிப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே மிதிலையின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. போஜ்பூரில் வாக்களித்த நடிகரும் பாடகரும் பாஜக தலைவருமான பவன்சிங், தான் வளர்ச்சிக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார்.

விகாஸ்சீல் இன்சான் கட்சித் தலைவரும் மகா கத்பந்தன் துணை முதலமைச்சர் வேட்பாளருமான முகேஷ் சகானி தர்பங்காவில் தன் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.  தானாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ராம்கிருபால் யாதவ் பாட்னாவில் வாக்களித்தார்.
பாஜக தலைவர் ரிதுராஜ் சின்கா பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வளர்ந்த இந்தியா என்னும் குறிக்கோளை எட்டுவதற்காகத் தான் வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான லாலு பிரசாத், ராப்ரிதேவி, இப்போதைய முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் குடும்பத்துடன் சென்று பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

அலிநகர் பாஜக வேட்பாளரும் நாட்டுப்புறப் பாடகியுமான மைதிலி தாக்கூர் தனது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டார்.லோக்ஜனசக்தித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் ப1வான் ககாரியாவில் வாக்களித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *