
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் சொத்து தகராறில் கணவனை அவரது மனைவி, தனது மகனுடன் வந்து அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.உடலைக் கைப்பற்றிப் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவில் வசிப்பவர் லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (67) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மாரியம்மாள், 65, மகன் ராஜா, 40, மகள் சந்திரா, 35, உள்ளனர்.
மகன் ராஜாவுக்குஇரண்டு மனைவிகளுள்ள நிலையில் முதல் மனைவி பிரிந்து இரண்டாது மனைவியுடன் இருந்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ராஜா கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் தந்தை கருப்பண்ணன் அவரது பெயரில், தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் என்பவரின் பெயரில் சொத்தை எழுதி வைக்கக் கருப்பண்ணன் முடிவு செய்துள்ளார். இதனால், தந்தை கருப்பண்ணன் மகன் ராஜாவுக்கும், கடந்த சில ஆண்டுகளாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கருப்பண்ணன் தனது மனைவி மாரியம்மாளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது தாய் வீட்டிலிருந்து வருகிறார். இந்த நிலையில் கருப்பண்ணன் மகன் ராஜா எனது பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு ராஜாவும் அவரது தாய் மாரியம்மாளும் கருப்பனிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் வாழ்ந்து காட்டுவோம் வாழ்ந்து காட்டுவோம் என்ற விவாத நிகழ்சியில் இறந்த கருப்பண்ணன் அவரது மனைவி மாரியம்மாள் மகன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர் அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளில் கருப்பணனை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த கருப்பண்ணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தபின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மாரியம்மாள், மகன் ராஜாவையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் பட்டப் பகலில் மனைவி மகன் ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

