
விஜயகாந்த் மறைவுக்கு அமித்ஷா இரங்கல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது திரை கதாபாத்திரங்கள்மூலம் மக்களிடையே தேசபத்தியை தூண்டினார்.
திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் விஜயகாந்த் என ஜெ.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறந்த மனிதநேயர், துணிச்சலுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தே.மு.தி.கத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர், துணிச்சலுக்கு சொந்தக்காரர், தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராகத் திகழ்ந்தவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்மீது அவருக்கும், அவர்மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர். நடிகர் சங்கத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும், அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தே.மு.தி.கத்தொண்டர்கள், நண்பர்கள், திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவை அறிந்து அதிர்ச்சியுற்றேன்; அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தேமுதிக தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் மக்களுக்காகக் கர்ஜித்த விஜயகாந்த் குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் எனத் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவி்த்துள்ள தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் – தமிழ்த் திரை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த, மிகச் சிறந்த மனிதநேயப் பண்பாளர், புரட்சி கலைஞர் மதிப்புமிகு. ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் ! தமிழ் மக்களுக்காகக் கர்ஜித்த அந்தக் குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் !,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டவர்: விஜயகாந்த்
ஒரு சிறந்த நடிகராகவும் அரசியல் தலைவராகவும் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டவர் விஜயகாந்த் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சமூகம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் விஜயகாந்தின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
பொன் மனம் கொண்டவர் விஜயகாந்த்: ரோஜா
பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது என ஆந்திர அமைச்சர் ரோஜா இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நம்பிக்கையான தலைவராக விளங்கியவர் விஜயகாந்த்: நடிகர் சிவகுமார்
அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என நடிகர் சிவகுமார் புகழாரம் தெரிவித்துள்ளார். சாமந்திப்பூ படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்; புதுயுகம் படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது என்று நடிகர் சிவகுமார் உருக்கம் தெரிவித்தார்.
விஜயகாந்த் மறைவுக்கு நெப்போலியன் இரங்கல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிக நாள் இருந்து திரைத்துறை, நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டிய நல்ல நடிகர், நல்ல தலைவரை இழந்துவிட்டோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் விஜயகாந்த்.
விஜயகாந்த் போற்றுதலுடன் நினைவுகூரப்படுவார்: பிரியங்கா காந்தி
பொன் நெஞ்சம் கொண்ட விஜயகாந்த் போற்றுதலுடன் நினைவுகூரப்படுவாரெனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். விஜயகாந்தை நேசித்த, நம்பிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
வள்ளலுக்கெல்லாம் வள்ளல் விஜயகாந்த்: பாரிவேந்தர்
குழந்தை மனம் படைத்த விஜயகாந்த் வள்ளலுக்கெல்லாம்
வள்ளல் எனப் பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் மறைவால் தமிழகத்தின் அரசியல் | எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் உதவி செய்தவர்: ஜவாஹிருல்லா
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் உதவி செய்தவர் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெள்ளையுள்ளம் கொண்டு கறுப்பு வைரம் : வீரமணி
வெள்ளையுள்ளம் கொண்டு கறுப்பு வைரமாகவே வாழ்ந்த விஜயகாந்த் சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் என வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.



