
சர்வதேச அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் வந்து நின்றுகொண்டிருக்கிறது. ‘இங்க அடிச்சா.. அங்க வலிக்கும்’ என்கிற கதையாக, அமெரிக்காவைப் பந்தாட நினைக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவி உலக நாடுகளை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, உலகப் பொருளாதார வீழ்ச்சி என உலகமே பதற்றத்தில் இருக்கும் இந்தச் சூழலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கும் உலக நாடுகளின் உற்றுநோக்கலாக மாறியிருக்கிறது.
இதில் இந்தியத் தலைவர்கள் பங்கேற்கப் போகிறார்கள் என்ற அதிரடித் தகவலும் வெளியாகியிருக்கிறது. என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்…
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு தீவிரமடைந்து வந்தது. சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் முக்கியப் பாதையில், கத்தாரைச் சேர்ந்த ஒரு முன்னணி எரிசக்தி நிறுவனத்திற்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற பிரம்மாண்ட கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின.இந்தத் தொடர் மோதல்களால் வளைகுடா பிராந்தியமே போர்க்களமாக மாறத் தொடங்கிய சூழலில், உலக நாடுகளின் தலையீட்டால் ஒரு தற்காலிக அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 60 நாட்கள் இடைக்கால அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளும் டெல்லியிலும், சர்வதேச அரங்குகளிலும் திரைமறைவில் தொடங்கப்பட்டன. ஆனால், அந்த அமைதி முயற்சிகள் அனைத்தும் தற்போது முற்றிலும் சுக்குநூறாக்கப்பட்டுள்ளன.. அமெரிக்கா தனது ராணுவ அச்சுறுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து ராணுவ இலக்குகளும் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் பாதுகாப்புப் படை பகிரங்கமாக எச்சரித்திருந்தது.
சொன்னபடியே, தற்போது பஹ்ரைன் மற்றும் குவைத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் தனது அதிநவீன ஏவுகணைகளையும் தற்கொலைத் ட்ரோன்களையும் ஏவி அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பஹ்ரைனில் அமைந்து சர்வதேசக் கடற்பகுதியைக் கண்காணிக்கும் அமெரிக்க கடற்படையின் மிக முக்கிய 5-வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் பிரதான விமானப்படை தளம் ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
“போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது” என்று ஈரான் கையை விரித்துள்ளதால், அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்ற அச்சம் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் மோதல், செங்கடல் பாதுகாப்புப் பிரச்சினை போன்றவற்றால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் உலகப் பொருளாதாரத்தை மேலும் பாதாளத்திற்குத் தள்ளும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் உலக நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான், ஈரானின் முன்னாள் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் அரசு மரியாதை இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்குகின்றன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய ஒரு அதிரடி வான்வழித் தாக்குதலில், 86 வயதான அலி கமேனி உயிரிழந்ததாக மார்ச் 1-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இதனை ஈரான் மறுத்திருந்தாலும், அவர்களின் புனிதக் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் ஒட்டுமொத்த ஆன்மீக மற்றும் அரசியல் உச்ச தலைவராக இருந்து நாட்டை வழிநடத்தியவர் அலி கமேனி. இஸ்லாமிய மரபுப்படி, ஒருவர் உயிரிழந்தால் 24 மணி நேரத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அலி கமேனியின் இறுதிச் சடங்கு பல மாதங்களாகத் தள்ளிப்போனது. அதற்குக் காரணம், ஈரானில் நிலவும் தற்போதைய கடுமையான போர்ச் சூழல், வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்கள் மற்றும் ஷியா இஸ்லாமியர்களின் புனித மாதமான மொஹர்ரமின் முதல் 10 நாட்கள் துக்க அனுசரிப்புகள் ஆகும்.
கடந்த 1989-ஆம் ஆண்டு ஈரானின் நிறுவனரான ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனியின் இறுதிச் சடங்கில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் திரண்டனர். ஆனால், தற்போது அலி கமேனியின் இறுதிச் சடங்கில் சுமார் 2 கோடி மக்கள் வரை நாடு முழுவதிலிருந்தும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாள்வதற்கான பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவே இத்தனை மாத கால அவகாசம் தேவைப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த அலி கமேனியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா – ஈரான் இடையேயான தற்போதைய ராஜதந்திரச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் மோடி இதில் நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஈரானுடனான இந்தியாவின் நீண்டகால நட்புறவை நிலைநாட்டும் வகையில், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, பீகார் மாநில ஆளுநர் ஜெனரல் சையத் ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா ஆகியோர் இந்தியா சார்பில் ஈரானுக்குச் செல்லவுள்ளனர். ஒருபுறம் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு, மறுபுறம் கச்சா எண்ணெய்க்காக ஈரானுடன் சுமுகமான நட்பு என இரண்டு நாடுகளையும் சமமாக கையாளும் இந்தியாவின் இந்த தூதரக நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது
வளைகுடாப் பகுதியில் அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில், உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அலி கமேனியின் இறுதிச் சடங்கும் நடக்கவிருக்கிறது. அடுத்த சில நாட்களில் மத்திய கிழக்கில் போர் இன்னும் தீவிரமாகுமா அல்லது உலக நாடுகள் தலையிட்டு அமைதியை நிலைநாட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…



