சமையல் எண்ணெய்களின் மறு பயன்பாடு தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்துக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாகவும், பொதுமக்களின் நலத்துக்கு எதிரான இந்த வழக்கம் மனித உரிமை மீறலாகும் என்றும் கூறிப் புகார் அளித்துள்ளனர். மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த பொதுநல அமைப்பு அளித்துள்ள புகாரில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயின் மறுபயன்பாடு, பயோடீசல் கொள்கை ஆகியவை குறித்துக் கவலை தெரிவித்துள்ளது.
மறுபயன்பாட்டு நடைமுறையால் புற்றுநோய், நெஞ்சக நோய்கள், ஈரல் நோய்கள் என உடல்நலத்துக்குத் தீங்குநேரும் அபாயம் உள்ளதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான இந்தச் சிக்கலில் ஆணையம் தலையிட்டு, விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரியுள்ளது.
இந்தப் புகாரை ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் பிரியங்க் கானூங்கோ, இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் தர ஆணையத் தலைவருக்கும், நலவாழ்வு அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து, இதொடர்பாக மாநிலவாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
சமையல் எண்ணெய்களின் மறு பயன்பாடு – அறிக்கை அளிக்க உத்தரவு !

