K. C. Palanisamy: தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து!

Advertisements

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கிச் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றித் தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கிப் பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கே.சி. பழனிச்சாமியின் அவதூறு வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கச் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *