
தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்துவரும் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது அரசு அதிகாரிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கு. அதுவும் ரொம்ப கோபத்தோடு அதிகாரிகளை மிரட்டியது அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக சொல்றாங்க..
மேலும் இந்தப் பேச்சு அரசு அதிகாரிகளுக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அன்றைக்கு நீங்க பார்த்த பழனிசாமி வேறு.. இப்ப நீங்க பாக்குற பழனிசாமி வேறு.. அதனால் அரசு அதிகாரிகள் நடுநிலையாக நடக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னதோடு, சொன்னதை செய்வான் இந்தப் பழனிசாமி என்றும் ஆவேசமாக மிரட்டியுள்ளார்.
திமுக அரசுக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை உறுதிபட கூறியிருக்கார். அதுமட்டுமல்ல, திமுக அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் எந்தப்பதவியில் இருந்தாலும் விட்டு வைக்கமாட்டேன், என்ன நடந்தாலும் கவலைப்பட மாட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்துச் சொல்லியிருக்கும் அதிமுக பிரமுகர் பெங்களூரு புகழேந்தி, தற்போது தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போலீஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் முழுக்க முழுக்க தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அப்படியிருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த முடியும் என புகழேந்தி கேட்டுள்ளார். அதிகாரிகள் பிரசார கூட்டங்களை எப்படி நடத்த முடியும், தேர்தலை யார் நடத்துகிறார்கள் என்பதுகூட தெரியாமல் எப்படி முதலமைச்சராக எடப்பாடி இருந்தார் என்று புரியவில்லை என்று புகழேந்தி கேட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளை மிரட்டுவது ஒருபோதும் வேலைக்கு ஆகாது. அதிமுகவும் ஆட்சிக்கு வரவும் முடியாது. அதேநேரம் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்குப் போறது உறுதி என்றும் புகழேந்தி சொல்லியிருக்கார். அரசு கஜானாவிலிருக்கும் பணம் எல்லாம் அரசு ஊழியர்களுக்கே போகுது என்று சொன்ன பழனிசாமி , அரசு ஊழியர்களுக்காக எதையும் செய்ததில்லை என்று புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.




