R. Kamaraj: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு!

Advertisements

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகப் பருப்பு,  எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவ. 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் இதே முறையீடு தொடர்பாகத் தாங்களும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிபதி அன்று 2 வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 6 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை உறுதியளித்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6-ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *