
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இன்றைக்கு வெளியான படம் ரெட்ரோ. கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருக்கும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சூப்பர் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருப்பதாலும் மேலும் சூர்யாவுடன் முதல் முறை அவர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கேற்றார் போல் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட்டானது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க குணச்சித்திர வேடங்களில் பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவரது இசை இந்த படத்திற்கு இன்னும் மெருகூட்டியது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் இப்படம் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளிவந்துள்ளது. அதுவும் நடிகர் சூர்யா வாயில் இருந்து இப்படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது. அண்மையில் இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, “நினைத்ததை விட படம் சூப்பரா வந்திருக்கு. ரொம்பவே திருப்தியா இருக்கேன். நல்ல படம் கொடுத்திருக்கோம்” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறினாராம். இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரெட்ரோ படத்தின் முதல் விமர்சனம் சூர்யா தரப்பில் இருந்து மிகவும் பாசிட்டிவாக வந்துள்ளது.



