மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 25 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து, கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, இன்று அதிகாலை 12ம் கால யாக சாலைப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்குக் கொண்டு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இட மெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவையொட்டி, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


