பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம் : முதல்வர் விஜய் உறுதியேற்பு!

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்..

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரை பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என்றும் வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பதிவில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு அருகே அவரின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தான் மரியாதைச் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம் – சமூக நீதி காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பதிவில், ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளில் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
 “பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *