சென்னை, திருவள்ளூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.



