Rajnath Singh:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு வரலாம்!

ஜம்மு : “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போர், இந்தியாவுக்கு தாராளமாக வரலாம். பாகிஸ்தானை போலல்லாமல், அவர்களை நாங்கள் சொந்த மக்களாகவே கருதுவோம்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு

இந்த தேர்தலில், ‘இண்டி’ கூட்டணியின் அங்கமாக காங்கிரசுடன் கூட்டணி வைத்து, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில், ராம்பான் மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 2019 ஆகஸ்டில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது துப்பாக்கிகளுக்கு பதில், லேப் – டாப்களை எடுத்துச் செல்கின்றனர்.

பா.ஜ., தலைமையில் அரசு அமையும் பட்சத்தில், இதுவரை கண்டிராத வளர்ச்சியை, ஜம்மு – காஷ்மீர் அடையும். இதைப் பார்த்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், ‘நாங்கள் பாகிஸ்தானுடன் வாழ விரும்பவில்லை; இந்தியாவுக்குச் செல்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாக்., கருதுகிறது. ஆனால் இந்தியா அப்படி நினைக்கவில்லை. அவர்களை சொந்த மக்களாகவே கருதுகிறது; அவர்கள் தாராளமாக இந்தியாவுக்கு வரலாம்.

பயங்கரவாதம்

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே அனைவரும் விரும்புவர். உங்களால் நண்பரை மாற்ற முடியும்; ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது. அது போலத்தான், பாகிஸ்தானுடன் நல்லுறவை பேண நாங்கள் விரும்புகிறோம். இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதம். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *