வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் முடிவை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரும் ஆணவத்தையும் விலையாகப் பெற்றுத் தருகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தில்லி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக அமைச்சர் ஒருவர், இளைஞர் ஒருவரை அறைவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாக்காளர்களைக் கண்டு இனி அஞ்சத் தேவையில்லை என்று கருதும் அதிகாரத்தின் முகமே இது எனக் குறிப்பிட்டுள்ளார். தெருவில் நின்று கேள்வி கேட்டால் – அறை விழுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்வு வினாத்தாள் கசிவு குறித்துக் கேள்வி கேட்டால் – தடியடி நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் – ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். தேர்தல் மூலம் தாங்கள் பதவியிலிருந்து அகற்றப்படலாம் என்ற அச்சம் இல்லாததாலேயே இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் முடிவை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரும் ஆணவத்தையும் விலையாகப் பெற்றுத் தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


