
கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யா உடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு தெலுங்கில் தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. இதனால் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன.
எஸ்.கே.21 படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவிக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி அவர் நடிக்கும் அடுத்த படத்தை கீது மோகன் தாஸ் இயக்க உள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதன் டைட்டில் வருகிற டிசம்பர் 8-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த கூட்டணி உறுதியானால் நடிகை சாய் பல்லவி இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைப்பார். அதுமட்டுமின்றி யாஷுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படமாகவும் இது அமையும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

