
Rahul Gandhi -Priyanka Gandhi: ”கேரள நிலச்சரிவில் அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கேரள நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைக் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார். தற்போது , வயநாடு மக்களை மட்டுமே கவலை கொண்டுள்ளேன். எனது தந்தை இறந்தபோது எந்தளவு துக்கம் அடைந்தேனோ, அதே துக்கத்தை தற்போது மீண்டும் அடைந்துள்ளேன்,
இது வயநாட்டிற்கும், கேரளாவிற்கும் மற்றும் தேசத்திற்கும் ஏற்பட்ட பயங்கரமான ஒரு சோகம். நிலைமையைக் குறித்து ஆய்வு செய்ய வந்தோம். எத்தனை பேர் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நிச்சயமாக இது ஒரு தேசிய பேரழிவு. அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி கூறியதாவது: கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு பாதிப்பால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர் என்றார்.

