மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கவும், தொகுதி மறுவரையறை செய்யவும் வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறாததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கவும், அதற்கு ஏதுவாகத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஐம்பது விழுக்காடு உயர்த்தவும் வகை சய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உறுப்பினர்களின் விவாதம் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்த மசோதா குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது வரலாற்றுச் சிறப்பு மசோதா என்றும், பெண்களுக்கு அதிகாரமளிக்கக் கூடியது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின் தொகுதி மறுவரையறையும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடும் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமர் ஒரு மந்திரவாதி என்றும் ராகுல்காந்தி கூறினார்.
மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகளிருக்கான மசோதா நிறைவேற்றுவதற்குத் தடையாக யார் இருக்கின்றனர் என்பதை இந்த நாட்டின் பெண்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். அதன்பின் மசோதா மீது பகுதிவாரியாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 489 பேர் வாக்களித்தனர்.
இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 பேரும், எதிராக 211 பேரும் வாக்களித்திருந்தனர். அரசியல்சட்ட மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற வேண்டும் என்பதால் மசோதா தோல்வியடைந்தது. 489 பேர் வாக்களித்த நிலையில் 326 வாக்குகள் பெற்றிருந்தால் மசோதா வெற்றிபெற்றிருக்கும். அதற்கும் குறைவாகவே மசோதாவுக்கு ஆதரவு இருந்ததால் அது தோல்வியடைந்தது.

