
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்காகத் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து ஆளுநர் ஆர். என்.ரவி உத்தரவிட்டார். இந்தக் குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக மாநில அரசே, துணை வேந்தர்களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். ஆனால், முதன் முறையாகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றிருந்தார்.
இதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துடன், யுஜிசி விதிப்படி அதன் பிரதிநிதி ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்தது. மேலும், துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவைத் தமிழக அரசும் நியமித்தது.
இந்தச் சூழலில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரங்களைச் சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேடுதல் குழுவைத் தமிழக அரசு நியமிக்கும் என நம்புகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

