L. Murugan: பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசுத் தீர்வு காண வேண்டும்!

பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம் விரைந்து பேசி மாநில அரசுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருப்பூரில் மத்திய இணையமைச்சர் முருகன்தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுக்கா, சேவூர், தண்டுக்காரன்பாளையத்தில், ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ எனும் யாத்திரை நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று கலந்து கொண்டு, மாநில அரசின் சுகாதாரத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார்.

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற உறுதிமொழியைப் பொதுமக்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அவர் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார். மேலும், பயனாளிகளுக்கு மத்திய அரசின் உஜ்வாலா, ஆயுஷ்மான் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஆறரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் மாநில அரசு கோரிக்கைகள்குறித்து விரைந்து பேசித் தீர்வு காண வேண்டும் என்றார். இந்நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *