
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளைத் தொடங்கி வைக்கிறார்.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாகத் தரப்படுகிறது. பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரூ.1000 தொகை சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்ட டோக்கனில் எந்தெந்த தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.1000 பணத்துடன் பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளைத் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளைக் காலை 9.30 மணிக்குப் பொங்கல் பரிசை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். நாளைக் காலை 9.30 மணிக்கு ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி ரேசன் கடையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


