Ladakh: 4 இடங்களில் படைகளை விலக்கிய சீனா…காரணம் என்ன தெரியுமா?

Advertisements

பீஜிங்: கிழக்கு லடாக்கின் கல்வான் உட்பட நான்கு இடங்களிலிருந்து படைகளை விலக்கி உள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா – சீனா ராணுவ வீரர்களிடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஜூனில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. லடாக்கின் பல பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சு வாயிலாக மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதுவரை 21 கட்ட பேச்சு நடந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் பிரிக்ஸ் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு இடையே நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்து பேசினர். அதில், கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இரு நாட்டு படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வது, இரு நாட்டு உறவுகளைப் புதுப்பிக்க உதவும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பேச்சுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருவரும், இந்தியா – சீனா எல்லை பேச்சுவார்த்தை குழுவின் சிறப்புப் பிரதிநிதிகள். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பர புரிதல், தொடர் பேச்சு, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நிலைமையை உருவாக்குவது ஆகிய கருத்துக்களை கொண்டுள்ளனர். அதைச் செயல்படுத்துவது என இரு தரப்பு பேச்சில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு உட்பட நான்கு இடங்களில் இருநாட்டு படைகள் ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளன. சீனா – -இந்தியா உறவின் நிலைத்தன்மை, இரு நாட்டு மக்களின் நீண்ட கால நலன்களுக்கும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் அவசியம். இரண்டும் வளர்ந்து வரும் நாடுகள். எனவே, மோதலுக்குப் பதில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை தேர்வு செய்ய வேண்டும் என வாங் யீ வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *