
இந்தியா ஒரு வளம்,அழகு, பழமை வாய்ந்த நாடு. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ள நம் பாரதம் மன்னர்கள் கட்டிய கலைநயமிக்க, வேலைப்பாடுகளுடன் கூடிய கோவில்கள், மசூதிகள் கண்ணைக் கவரும் வண்ணம் பல நூற்றாண்டுகளாக வரலாறு பேசக்கூடியது.
தாஜ்மஹால், செங்கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சாவூர் பெரிய கோவில் இன்னும் பல கட்டிடங்கள் சான்று. அவற்றில் ஒன்று குதுப்மினார் கோபுரம்.

இந்தியாவில், டில்லியில் 72.5 மீட்டர்கள் அதாவது சுமார் 237.8 அடி உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவில் முகலாயர் படையெடுத்து வந்து இந்தியாவின் பல நகரங்களைக் கைப்பற்றினர். முகலாய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பட்டது. குதுப் மினார் என்பது இந்திய-இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும்.

இந்தோ-இஸ்லாமிய கட்டிட கலைக்கு புகழ் பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்கது குதுப் மினார்.
UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரியக் கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. மேலும் 2006 ஆம் ஆண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்த தளமாகும். அந்த ஆண்டில் 3.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் குத்துப் மினாரைக் கண்டு களித்தனர்.
கட்டமைப்பு:
குதுப் மினாரின் உச்சி வரை சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். அடித்தளத்தின் குறுக்கு விட்டம் 14.3 மீட்டர்களாகும், மேல் தளம் 2.75 மீட்டர்கள் குறுக்கு விட்டம் கொண்டதாகும். மேலும் அருகாமையில் நடந்த ஆய்வுகளின்படி இதன் கட்டமைப்பு ஒரு திசையில் சற்றே சரிந்து இருப்பதாக காணப்படுகிறது. மேலுச்சியில் இரண்டு அடுக்குகள் நீங்கலாக இதன் பிற இடங்களில், குறிப்பாக மக்கள் செல்லும் வழி அனைத்தும் சிவப்பு வண்ணம் கொண்ட மணல்கற்களால் கட்டியதாகும். இப்பகுதி வரையில் மட்டும் வெள்ளை சலவை கற்களால் ஃபிருஸ் ஷா துக்ளக் வம்ச அரசரால் கட்டப்பெற்றது.
சிறப்பம்சங்கள்;
72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப்மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி.
ஆப்கானிஸ்தான் நாட்டில் காணப்படும் ஜாம் மினார் எனும் கட்டிடத்தை விட உயரமாகவும் பெயர் பெற்றிடும் நோக்கத்துடன் டெல்லியின் முதல் இஸ்லாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக், 1193 ஆம் ஆண்டு குதுப் மினார் என்ற இந்த கோபுரத்தின் கட்டிட வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அவரை பின்தொடர்ந்த, இல்த்மிசு என்ற அரசர் மேலும் மூன்று தளங்களைக் கட்டி முடித்தார். 1286 ஆம் ஆண்டில், அலாவுதீன் என்ற அரசரின் கீழ் ஐந்தாவது மற்றும் கடைசி தளம் கட்டி முடிந்தது. ஐபக் முதல் துக்ளக் வரையான காலகட்டத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்களை அந்த தூபியில் தெளிவாகக் காணலாம்.ஆப்கானிஸ்தான் நாட்டில் இதற்கு முன் கஜனி மற்றும் கோரி வம்சத்தினர் கட்டிய கோபுரங்களைப் போல, இந்த குதுப் மினாரும் பல ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய பட்டையான விளிம்புடன் கூடிய உருளை வடிவான அம்புகள் கொண்டு வடிவமைக்கப் பெற்றது. மேலும் தனிப்பட்ட முகாமா வகை தண்டயங்களைக் கொண்டு உப்பரிகைகள் உருவாக்கப்பட்டன. இந்த தூபி சிவந்த வரை மணற்கல்லால் கட்டியது மேலும் அதன் மேல் குர்ஆனில் இருந்து கவிதைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப் பெற்றது.
டில்லி நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கடைசியாக ஆண்ட இந்துக்கள் வம்சத்தை சார்ந்த தொமர்கள் மற்றும் சௌஹன்கள் வாழ்ந்து அழிந்த செங்கோட்டை என்ற இடத்தின் இடிபாடுகளில் தான் இந்த குதுப் மினார் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அதற்கு முன் 27 மிகப் புராதனமான இந்து மற்றும் ஜைன மதத்தினரின் கோவில்கள் நிலை கொண்டிருந்தன, அவற்றை அழித்து அதில் எஞ்சிய பொருட்களைக் கொண்டு இந்த குதுப் மினார் நிறுவப்பெற்றது.
குதுப் மினாரில் உள்ள ஒரு செதுக்கு கலைத்திறன் வேலைப்பாட்டில் “ஸ்ரீ விஸ்வகர்மா பிரசாதே ரக்ஷித” என்ற வாசகம் இன்றும் உள்ளது. அதன் மூலமாக விசுவகர்மாவின் இறையாசி பெற வேண்டும் என்பதற்காக ஓர் அடிமை இந்து கைவினைஞர் கட்டிடப்பணியில் இருந்த வேளையில் இதை செதுக்கி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக பேசப்படுகிறது, தொழுகைக்காக எனவும் வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாம் மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்துபுத்தின் ஐபக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியாதாகக் கூறினாலும், சிலர் ட்ரான்ஸ்ஓக்சியானா என்ற இடத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி குத்துபுத்தின் பக்தியார் காக்கி என்பவரை போற்றும் வகையில் சூட்டப் பெற்றதாக கூறுகிறார்கள், இல்துமிஷ் என்ற அரசரும் அவரை மிகவும் போற்றி வணங்கியதாக கூறுகிறார்கள்.
இந்த குதுப் வளாகத்தின் அருகாமையில் நிற்கும் தில்லி இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும். நாமும் ஒரு முறை குதுப் மினார் பார்க்க செல்லலாம்.


