Russia:மேற்கத்திய நாடுகளுக்குப் புடின் எச்சரிக்கை!

Advertisements

மாஸ்கோ: ” நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால், அது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் ”, என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

கோரிக்கை
உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிற்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.

திறன் இல்லை
இது தொடர்பாகப் புடின் கூறியதாவது: ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்துத் தாக்குதல் நடத்தும் திறன் உக்ரைன் ராணுவத்திற்கு கிடையாது. அவர்களால் முடியாது. இந்த ஏவுகணைகளை, செயற்கைகோள் மூலமான உளவுதகவல்களை பெறாமல் பயன்படுத்த முடியாது. அந்த வசதிகள் உக்ரைனிடம் இல்லை. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களைத் தான் உக்ரைன் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, இந்த ஏவுகணைகளுக்குத் தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளது. உக்ரைனிய வீரர்களால் பயன்படுத்த முடியாது. எனவே, இதனை உக்ரைன் பயன்படுத்துகிறதா இல்லையா என்ற கேள்வியைவிட, இந்தப் போரில் நேடோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம்.

பதிலடி
இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும். அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம். இதன் மூலம் எங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களுக்குரிய பதிலடியை கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *