
“புரட்டாசியில் பொன்னுருக காய்ந்து மண்ணுருக மழை பெய்யும்” என்பார்கள்…
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஆடி அம்மனை வழிபடுவதற்கு, கார்த்திகை ஐயப்பனை வழிபட, மார்கழியில் ஆண்டாள், பெருமாள், அதுபோலப் புரட்டாசியில் வெங்கடேசப் பெருமாளுக்கு என்று தெய்வங்களுக்கு எனக் குறிப்பிட்ட மாதங்களை ஒதுக்கிப் பய பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
வெறுமனே வழிபடுவதற்கு மட்டுமல்லாது சில அறிவியல்பூர்வமான நன்மைகளுக்காகவும், அதாவது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் சாதகமானதே. அப்படி என்ன விசேஷம், பார்க்கலாம். ஆடி மாதத்தில் கூழ் வார்ப்பது, நம் உடல் சூடு தணிப்பதற்கும், அக்கால கட்டத்தில் புது மழை பெய்யும் இதனால் நோய்த் தொற்று உண்டாகும்.
இதனைத் தவிர்க்கவே வீடுகளில் கிருமி நாசினியான வேப்பிலை தோரணம் கட்டி வைக்கிறார்கள். மாவிலைகள் அதிக ஆக்சிஜன் வெளியிடும், அடுத்து மார்கழியில் வைகைறையில் துயில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துக் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்தி பாசுரங்களைப் பாடி வழிபடச் செல்வர்.
ஏன் அந்த மாதம் விடியற் காலை எழ வேண்டும்? மார்கழியில் பனிக் காலம். மனிதன் உடலில் உள்ள செல்கள் சுருங்கும், ரத்தம் கூடக் குளிர்ச்சியாகும். மேலும் அக்கால கட்டத்தில் ஓசோன் வாயு அதிக அளவில் காற்று மண்டலத்தில் பரவி இருக்கும். ஆக்சிஜனை விட நன்மைகள் அதிகம் உள்ளதால் நாம் செல்லும்போது ஓசோன் சுவாசிக்க நல்ல தருணம், உடலுக்கும் நல்லது.
இப்போது புரட்டாசி மாதம். இம்மாதத்தில் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபடுவர். அசைவம் சாப்பிடுபவர்கள் இம்மாதத்தில் அசைவம் தவிர்ப்பர். புனிதமான மாதமாகப் புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வர முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்புலத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மிக காரணங்களைப் பார்ப்போம்.
புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்தப் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளோம். ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?
தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது எனப் பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் ஏன், எதற்குச் சாப்பிடக் கூடாது எனக் கேள்வி கேட்பது வழக்கம். அதற்கான உரிய விளக்கத்தைக் குழந்தைகளுக்கோ, அல்லது அசைவம் சாப்பிட விரும்புபவர்களுக்கோ சொன்னால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
பொதுவாகப் புரட்டாசி மாதத்தின்போது தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும்போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.
இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தில் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளைத் தரக் கூடியது. இந்தக் காலத்தில் அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.
இந்தக் காலத்தில் உடல் சூட்டால் தோல் சூடாவதோடு, உலர்ந்து போகுதல், அதிகமாக வியர்த்தல் உடல் வெப்பநிலை 105 பேரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும் இதயத்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் அதிகரிப்பதோடு வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அர்த்தமுள்ள இந்து மத பண்டிகைகள் பக்தி மார்க்கமாக மனதைக் கட்டுப்படுத்தி, உடல் ரீதியாகவும் உடல் நலம் காக்க வழி செய்கிறது. பக்தியுடன் இருப்போம், சக்தியுடன் உடல் நலம் காப்போம்…

