பிரபல நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது…
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம்மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னால் 2005 ஆம் ஆண்டு கஸ்தூரி மான் மற்றும் 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
2018 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படம் தான் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் அராத்து ஆனந்தியாக ஆர்ப்பாட்டமாக நடித்திருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் யூட்யூப்பில் அதிகம் ஹிட் அடித்த பாடல்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் தியா, என்.ஜி.கே., கார்கி, பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி அடுத்ததாகச் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி படங்களிலும் சாய் பல்லவி பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவி திருமணம் செய்துக் கொண்டதாகப் புகைப்படம் ஒன்று வெளியானது. என்ன, ஏதேன்று தெரியாமல் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சாய் பல்லவி மாலையுடன் இருக்கும் போட்டோ கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான பூஜையின்போது எடுக்கப்பட்டிருந்தது. அதில் சாய் பல்லவியுடன் இருப்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

இப்படி உண்மை என்னவென்று தெரியாமல் தவறான தகவல்களைப் பதிவிட வேண்டாமெனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

