சுக்ரீவன் ஆண்டு வந்த ‘மதுவனம்’ கொல்லிமலையாக மாறிய அதிசயம்!
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லி மலை இயற்கை எழிலுடனே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
எனினும் இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை தொடர்ந்து பார்க்கப்பட்டே வருகிறது.

ஆதிகாலத்திலிருந்தே கொல்லிமலை, எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மனால் பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது.வரலாறு:
கிபி 200-ல் கொல்லிமலை பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாகப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுவனம்’ எனும் மலைப்பிரதேசம் கொல்லிமலையாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுவதுண்டு.
ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகுத் துறை, மாசிலா அருவி ஆகிய இடங்கள் கொல்லிமலையின் முக்கியமான சுற்றுலாத்தலங்களாக அறியப்படுகின்றன.கொல்லிமலையில் பாயும் அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுவதை ஆகாய கங்கை அருவியென அழைக்கிறார்கள்.

அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ள இந்தக் கோயில் சுற்றிலும் மலைகள் சூழ எழிலுடன் காட்சியளிக்கிறது. கோயிலிலிருந்து தொடங்கும் படிகள் அருவியின் முடிவுவரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.
சதுரகிரி எனும் மலை உச்சியில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோயில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘அறப்பளி மகாதேவன்’, ‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார். இந்த அறப்பளீஸ்வரர் அய்யாற்றில் உள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ‘மீன் கோயில்’ என்றும் அறியப்படுகிறது.
கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டி படகுத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் கொல்லிமலை வரும்போது இங்குப் படகுச் சவாரியில் ஈடுபட மறந்துவிடாதீர்கள்.

ஆகாய கங்கை போல மிகப்பெரிய அருவி இல்லையென்றாலும், சுமார் 200 அடி உயரத்திலிருந்து விழும் மாசிலா அருவி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. மாசிலா அருவியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


கொல்லிமலை சந்தையில் பொருட்கள் வங்கிச் செல்வதற்காக வெகுதொலைவிலிருந்தெல்லாம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குக் கிடைக்கும் கிழங்குவகைகள், நிலக்கடலை, காய்கறிகள், தேன், பழங்கள் முதலிய பொருட்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
