
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கொண்டே ஆட்சியைப் பிடிக்கப் பாஜக முயல்வதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அம்மாநில அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில் சமீபகாலமாக முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகப் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்; ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும் சுயேட்சை மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிமீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாகக் கூறினார். சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் மனுவும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தச் சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், துணைநிலை ஆளுநர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக என அனைவரும் சேர்ந்து புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், இதனால் ரங்கசாமி நிம்மதியற்ற முதலமைச்சராக இருப்பதாகவும் அவர் கூறினார். ரங்கசாமி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

