
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. 4 நாட்களாகச் சிறுமியைத் தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி உயிரிழப்புகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்தது தெரிய வந்தது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளது. சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீசுக்கு பயந்து உடலைக் கால்வாயில் வீசியுள்ளனர்.
சிறுமி உயிரிழப்பு தொடர்பாக 2 பேரைப் பிடித்துப் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கேட்டு இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் புதுச்சேரியில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வரவழைத்துச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் போதை பொருளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.



