
விழுப்புரம் மாவட்ட அரசியலில் சி.வி. சண்முகம் தரப்பினரின் அதிரடி விலகல் முடிவு அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அதிமுகவில் இருந்து பாதி பேர் தவெகவில் இணைவார்கள்” என்று ஆதவ் அர்ஜுனா மேடைதோறும் சவால்விட்டு வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ-க்களும் நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவை நோக்கிப் படையெடுப்பது அந்தச் சபதத்தை நிஜமாக்கும் வகையில் அமைந்துள்ளது. மறுபுறம், “அதிமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது, தவெகதான் கூடிய விரைவில் அழிந்துபோகும்” என்று திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..இது பற்றிய தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. புதிய மாவட்ட செயலாளர் நடத்திய கூட்டங்களில் சி.வி. சண்முகம் தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானதுடன், மாவட்ட செயலாளர் பசுபதியின் கார் மீது கல்வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கையாக சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் அந்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தச் சூழலில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது விலகல் கடிதத்தை வழங்குவதற்காக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதால், அங்கு வழக்கமான பாதுகாப்பை விட கூடுதலாக மூன்று உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தாலும், அவர் இதுவரை எந்த மாற்றுக்கட்சிக்கு செல்வது என்பது குறித்து அறிவிக்கவில்லை. எனினும், அவர் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால், விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் கட்சிக்கு பெரும் பலத்தடியைக் கொடுத்துள்ளது.
ஒரு பக்கம் ஆளுங்கட்சியின் விமர்சனங்களும், மறுபக்கம் புதிய கட்சியின் எழுச்சியும் என அனல் பறக்கும் அரசியல் களத்தில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கட்சியைத் தாண்டி விசுவாசமாக இருந்த அடிமட்டத் தொண்டர்களும் நிர்வாகிகளும் மொத்தமாக வெளியேறுவது அதிமுகவின் கோட்டையையே ஆட்டம் காணச் செய்துள்ளது. சி.வி. சண்முகத்தின் அடுத்தடுத்த நகர்வுகளும், தவெகவை நோக்கி அவர் எடுத்துவைக்கப் போகும் அடியும் தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் என்னென்ன அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…


