தில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தியவர்களை விரட்டியடித்ததற்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீட் தேர்வு குழப்பங்களுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வியமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலக வேண்டும் என்று வலியுறுத்தித் தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.பேரணியில் சென்ற சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள், இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்கியதைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனக் கூறினார். மாணவர்கள் நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் நேர்மையான தேர்வு, நேர்மையான தேர்தல் இரண்டையுமே இந்த அரசு விரும்பவில்லை என்றும் டிம்பிள் தெரிவித்தார்.
இக்ரா ஹசன், நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதற்குப் பொறுப்பேற்றுக் கல்வியமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். பேரணியில் பங்கேற்ற சியா உர் ரகுமான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதே பேரணியில் பங்கேற்ற ராஜீவ் ராய், இந்த அரசு பள்ளிகளை மூடுவதாகவும், பல்கலைக்கழகங்களை இடிப்பதாகவும், தேர்வு வினாத்தாள்களை வெளியிடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசின் ரேணுகா சௌத்திரி, ஜந்தர் மந்தரில் வந்தே மாதரம், இன்குலாப் சிந்தாபாத் முழக்கங்கள் ஒலிப்பதில் ஜனநாயகம் மீண்டெழுவதாகக் கூறினார். இராமர் கோவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது, நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது, அறப்போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கைக் கைது செய்தது இப்படிப் போனால் அவை எவ்வாறு செயல்படும் என்று வினவினார்.



