
அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், ‘மறக்க முடியாத பாடத்தைக்’ கற்பிப்போம் என ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘தர்கோவின்’ அணு உலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தெற்கு ஈரானில் உள்ள முக்கியப் பாலங்கள், ரெயில் பாதைகள், மின் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களிலும், அமெரிக்க விமானப்படை தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதையடுத்து, குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து, பஹ்ரைனிலும தாக்குதல்கள் நடந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துவிட்டதாக பஹ்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
இதன் பின்னர், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் முழுமையாகத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், வர்த்தகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், ‘மறக்க முடியாத பாடத்தைக்’ கற்பிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார்.




