
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.
ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும்.
இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்குக் கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்துச் சபை நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்குச் சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.
மேலும் தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசுத் துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காகக் கோப்பு டெல்லிக்கு அனுப்பப்படும்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும்.
அப்போது நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.
