அதிமுகவில் அதிகாரப்பூர்வ பிளவு – ‘போர்வாள்’ எடப்பாடி பழனிசாமி!

Advertisements

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அஇஅதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியே செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்த உள்கட்சிப் பூசல் அண்மையில் தமிழக வெற்றி கழகம் அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளிச்சத்திற்கு வந்தது. வேலுமணி தலைமையிலான 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே நேரத்தில், கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் மீது ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்’ கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் அதிரடியாக மனு அளித்துள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை இருதரப்பு நிர்வாகிகளும் தனித்தனியாக நேரில் சந்தித்து தங்களது தரப்பு நியாயங்களை மாறி மாறி முறையிட்டு வருவதால் தலைமைச் செயலக வட்டாரம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இந்த அரசியல் புயலுக்கு மத்தியில்தான், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ பத்திரிகையின் கட்டுப்பாடு முழுமையாக எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் வசம் சென்றது. இதற்குப் பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி ‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய நாளேடு ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஆதரவு நிர்வாகிகளுடன் இணைந்து ‘போர்வாள்’ நாளேட்டின் முதல் பிரதியை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இனிவரும் காலங்களில் தனது தலைமையிலான அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் செய்திகள் அனைத்தும் ‘போர்வாள்’ பத்திரிகை மூலமாகவே தொண்டர்களைச் சென்றடையும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *