30,000 கோடி ஆடியோ உண்மையா? பி.டி.ஆரை திணறடித்த நிர்மல் குமார்.!

தென் தமிழகத்தின் அரசியல் களம் இப்போது மதுரையை மையமாகக் கொண்டு பயங்கரமாக சூடேறியிருக்கிறது.. ஒரு பக்கம் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்… இன்னொரு பக்கம் மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிர்மல் குமார்.. ‘

தென் தமிழகத்தின் சூப்பர் சிஎம் நிர்மல் குமார்தான்’, ‘மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது’ என பி.டி.ஆர் கொளுத்திப்போட்ட புகாருக்கு, இப்போது அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்திருக்கும் பதிலடி அரசியல் வட்டாரத்தையே உலுக்கியுள்ளது..

‘என் மீது பி.டி.ஆருக்கு தனிப்பட்ட ஈகோ… கும்பாபிஷேகம் நல்லபடியா முடிஞ்ச வயிற்றெரிச்சல்ல பேசுறாரு… 30 ஆயிரம் கோடி ஆடியோவுக்கு அவர் விளக்கம் தருவாரா?’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் நிர்மல் குமார். மதுரையில் உண்மையில் என்னதான் நடக்கிறது? பி.டி.ஆர் vs நிர்மல் குமார் மோதலின் பின்னணி என்ன? முழுமையாகப் பார்ப்போம்!”

“சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரை ராஜினாமா செய்யக் கோரி நிர்மல் குமார் அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். ‘கடந்த 3 மாதங்களாகவே அறங்காவலர் குழுத் தலைவரை மாற்ற வேண்டும் என பலர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், கோயில் உள் விவகாரங்களில் நாங்கள் ஒருபோதும் தலையிட மாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவராக ராஜினாமா செய்தால் அதற்கு அரசு பொறுப்பல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தனக்கு நிர்வாக ரீதியிலான பொறுப்புகள் மட்டுமே இருந்ததாகவும், பி.டி.ஆரின் தாயாரான ருக்மணி அம்மாவை கும்பாபிஷேகத்தின் போது தாங்கள்தான் நேரில் சென்று மரியாதை செலுத்தி அழைத்து அமர வைத்ததாகவும் நிர்மல் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.”

“இந்த மோதல் இதோடு நிற்கவில்லை! பி.டி.ஆரின் குடும்ப டிரஸ்ட் விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் நிர்மல் குமார்.

‘பி.டி.ஆர் தனது சொந்த ஈகோ காரணத்தால், பி.டி.ஆர் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தை கடந்த 3 ஆண்டுகளாக முடக்கி வைத்திருந்தார். அந்த டிரஸ்ட்டில் இருப்பவர்கள் என்னைச் சந்தித்து, பி.டி.ஆர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார், தவறான வரி போட்டு மண்டபத்தைப் பூட்டி வைத்திருக்கிறார் எனப் புகாரளித்தனர்.

நான் குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டேன்; ஆனால் சட்டரீதியாக மண்டபத்தைத் திறக்க உதவ தயார் எனக் கூறினேன். இப்போது அந்த மண்டபம் திறக்கப்படவுள்ள நிலையில், மதுரை மாநகராட்சிக்கு போன் செய்து பி.டி.ஆர் சண்டை போடுகிறார். சொந்த ஈகோவுக்காகத் தன் குடும்ப டிரஸ்ட் மண்டபத்தையே திறக்க விடாமல் தடுத்தவர் தான் பி.டி.ஆர்’ எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.”

“பி.டி.ஆரின் நிதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின்னணியையும், அந்தச் சர்ச்சைக்குரிய ஆடியோவையும் நினைவுபடுத்தி நிர்மல் குமார் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.

‘திமுக ஆட்சியில் அவர் நன்றாகச் செயல்பட்டிருந்தால், எதற்காக அவரது நிதியமைச்சர் பதவி பறிக்கப்பட்டது? ரூ. 30,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியான ஆடியோ குறித்து பி.டி.ஆர் இதுவரை விளக்கம் அளித்தாரா? இல்லையெனில் அந்த ஆடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பிப் பரிசோதனை செய்ய அவர் தயாராக இருக்கிறாரா?’ என அடுக்கடுக்கான கேள்விகளால் பி.டி.ஆரை திணறடித்துள்ளார்.

மேலும், ‘மதுரை மீனாட்சி கோயிலைக் கட்டிய பாண்டிய மன்னனை விட, நாங்கள்தான் கோயிலுக்கு எல்லாம் செய்தோம் என பி.டி.ஆர் பெருமை பேசி வருகிறார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்த வயிற்றெரிச்சலிலும், அவரது ஈகோவாலுமே இப்படிப் பேசுகிறார்’ என்றும் நிர்மல் குமார் சாடினார்.”

“பாண்டிய மன்னன் ஒப்பீடு, 30 ஆயிரம் கோடி ஆடியோ சர்ச்சை, குடும்ப டிரஸ்ட் கல்யாண மண்டப விவகாரம் என அமைச்சர் நிர்மல் குமார் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *