Advertisements

இஸ்ரேல்-ஈரான் இடையே 8 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் இரு வாரங்களில் முடிவு எடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட மத்திய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தபட்டது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. ஈரானில் இதுவரை 639 பேர் கொல்லப்பட்டதாகவும், 1300-க்கு அதிகமானோர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள சொரோகா மருத்துவமனை மீது நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில், 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Advertisements




