
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய ‘Inside the war room’ என்கிற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்தை வெளியிட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியபோது, உலகில் போர் நடைபெற்று வரும் சூழலில் war room என்கிற ஒரு பெயரே சரியா தவறா என்பது தெரியவில்லை என்றார். இன்றைய சூழலில் வலிமையான ஒரு புத்தகத்தின் தலைப்பாக உள்ளது என்று கூறினார். வியூக வகுப்பாளர்கள் எதிர்மறையான, தனிப்பட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு நெறிமுறைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, கடந்த 2017 ஆம் ஆண்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக தான் பொறுப்பேற்ற சமயத்தில் இருந்த சமூக ஊடகங்களின் வளர்ச்சியை காட்டிலும் தற்போது அவை அதிகம் வளர்ந்துள்ளது என்று கூறினார். தகவல் தொழில்நுட்ப அணியின் ஒரு பிரிவாக இருந்த சமூக வலைதளம், தற்போது முதன்மையானதாக மாறிவிட்டது என்றார்.


