
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த 94 ஆவது போட்டியில் யு மும்பா அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த 94ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றது. அந்த அணியின் ஹிமான்ஷூ ஆரம்பத்திலேயே அணிக்கு 4 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார்.
நரேந்தர் ஹோஷியார் மற்றும் அஜிங்க்யா பவார் ஆகியோரது அடுத்தடுத்த ரெய்டுகளால் தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகள் வரையில் பெற்றது. யு மும்பா அணி ஆல் அவுட்டாக தமிழ் தலைவாஸ் 13 புள்ளிகள் பெற்றது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 27 புள்ளிகள் பெற யு மும்பா 17 புள்ளிகள் பெற்றது.
கடைசி வரை சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் 50 புள்ளிகள் எடுக்கவே, யு மும்பா அணியானது 34 புள்ளிகள் எடுத்தது. இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் 7ஆவது வெற்றியை பெற்றது. இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 16 போட்டிகளில் 7ல் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் முதல் 6 இடங்கள் பிடிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் தலைவாஸ் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

