ஊரக வேலைத் திட்டம் : நிதிப் பங்களிப்பை குறைத்ததற்கு பிரியங்கா குற்றச்சாட்டு..!

ஊரக வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதிப் பங்களிப்பை 90 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாகக் குறைத்தது, அந்தத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் செயல் என்று பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊரக வேலை உறுதித்திட்ட மசோதாவை நிறைவேற்றியதைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை வேறு பெயராக மாற்றியதுடன் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பதை 125 நாட்களாக உயர்த்திப் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி படத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்த மசோதா குறித்துக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த மசோதா ஏழைகளுக்கு மிகவும் தீங்கானது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பிருந்த திட்டத்தில் மத்திய அரசு 90 விழுக்காடு நிதியை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது மத்திய அரசு 60 விழுக்காடு நிதியை வழங்கும் வகையில் குறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் மீதி 40 விழுக்காடு நிதியை வழங்க முடியாத மாநிலங்கள் இந்தத் திட்டத்தைத் தானாகவே கைவிட்டுவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *