நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

Advertisements

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து மக்களவையும், மாநிலங்களவையும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் முதல் நாள் தொடங்கியது.

சனி, ஞாயிற்றுக் கிழமைகள் தவிர டிசம்பர் 19 வரை மொத்தம் 15 நாட்கள் அவைவை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் அவை நாள்தோறும் மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இடையில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு விழாவையொட்டி அது குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதேபோல் தேர்தல் சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, தேர்தல் ஆணையமும் அரசும் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அவையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்றும் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.

இதற்கிடையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணுவாற்றல் துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கெடுக்கும் வகையில் சாந்தி என்னும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் காப்பீட்டுத் துறையில் நூறு விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான காப்பீட்டுத் திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுப் புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் கூட்டம் தொடங்கிய உடனேயே வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

இதையடுத்து அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாகத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் மறு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைப்பதாகத் தலைவர் இராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இத்துடன் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *