Khelo India Youth Games 2024: விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Advertisements

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாகத் தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகைதந்தார்.பின்னர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் 31-ம் தேதிவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.இதில்  கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைப்தொடங்கி வைத்தார்.விழாவில் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்,

விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தமிழகம் மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ளது.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டன.கேலோ இந்தியா போட்டிகள்மூலம் கனவு நனவாகியுள்ளது எனப் பேசினார்.

இதில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 4.50 மணிக்குச் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பாஜக தலைவர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்பட 27 பேர் பிரதமரை வரவேற்றனர்.

பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தை வந்தடைந்து, பின்னர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்குத் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திலிருந்து நேப்பியர் பாலம் வழியாகச் சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகையைக் கடந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை பிரதமரின் வருகையையொட்டி தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *