
President of India Droupadi Murmu | Mudumalai
நீலகிரி மாவட்டம் முதுமலை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, யானை பாகன் தம்பதி, பழங்குடியினர், யானை பாகன்களை சந்தித்து பேசினார்...
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானை முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியும்; அவற்றைப் பராமரித்த பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘த எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்துக்கு, ‘ஆஸ்கார்’ விருது கிடைத்தது.
படத்தில் இடம் பெற்ற யானை குட்டிகளைப் பார்ப்பதற்கும், பாகன் தம்பதியைச் சந்திக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று, டில்லியிலிருந்து மைசூரு வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர்மூலம், மாலை 3:30 மணிக்கு மசினகுடி வந்தார். அங்கு, அவருக்கு, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து வாகனம்மூலம், மசினகுடி – தெப்பக்காடு சாலை வழியாக, முதுமலை யானைகள் முகாம் வந்து சேர்ந்தார்.
அங்கு வரிசையாக நிறுத்தப்பட்ட வளர்ப்பு யானைகளைப் பார்வையிட்டு நான்கு யானைகளுக்குக் கரும்பு கொடுத்தார். தொடர்ந்து, ‘ஆஸ்கர்’ படத்தில் இடம்பெற்ற யானை குட்டிகள், பாகன் தம்பதி, பழங்குடி பிரதிநிதிகளைச் சந்தித்து பேசினார். பின், அங்கிருந்த 38 பாகன்களை சந்தித்து, 5 பாகன்களிடம் பேசிக் குறைகளைக் கேட்டார். அனைவருக்கும் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சி முடிந்து, மாலை 4.40 மணிக்கு வாகன மூலம், மீண்டும், மசினகுடி சென்று, ஹெலிகாப்டர்மூலம், மைசூரு சென்றார்.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மசினகுடி பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிட்டாய் வழங்கினார்.
President of India Droupadi Murmu | Mudumalai
ஜனாதிபதி வருகை முன்னிட்டு, தெப்பக்காடு – மசினகுடி சாலை 2:00 மணிக்கு தற்காலிகமாக- மூடப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுமலை வழியாகச் செல்லும் மைசூரு தேசிய நெடுஞ் லையில், வாகனங்கள் தடையின்றி இயக்கப்பட்டது.


