
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஈரானுடன் ஒப்பந்தம் நெருங்கிவிட்டது… அதனால்தான் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்’ என்று அறிவிக்கிறார். ஆனால் அதற்கு சில மணி நேரங்களிலேயே ஈரான், ‘அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை… அமெரிக்காவிடம் தாக்குதலை நிறுத்துங்கள் என்று நாங்கள் கேட்கவே இல்லை’ என்று பகிரங்கமாக மறுக்கிறது.
அப்படியானால் யார் சொல்வது உண்மை? ஹார்முஸ் ஜலசந்தி உண்மையிலேயே திறக்கப்படுமா? உலகையே பாதிக்கும் இந்த மோதலில் இந்தியாவுக்கு என்ன தாக்கம்? பெட்ரோல், டீசல் விலை குறையுமா… இல்லை இன்னும் உயருமா? உலக அரசியலில் தற்போது என்ன நடக்கிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்..!
உலக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திருப்பம் அரங்கேறுகிறது. நேற்று நண்பர்களாக இருந்த நாடுகள் இன்று எதிரிகளாக மாறுகின்றன. இன்று போர் நிறுத்தம் என்று பேசுபவர்கள், நாளை மீண்டும் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் தற்போது அமெரிக்கா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய அரசியல் நகர்வு நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு அறிவிப்பு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஈரான் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதாக அவர் கூறினார். அதோடு, புதிய அமைதி ஒப்பந்தம் உருவாகி வருவதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் இயல்பு நிலைக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு சில மணி நேரங்களிலேயே, ஈரானில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பதில் வந்தது.
“எந்த அமைதி ஒப்பந்தமும் இல்லை. அமெரிக்காவிடம் தாக்குதலை நிறுத்துமாறு நாங்கள் கோரிக்கையும் விடுக்கவில்லை. டிரம்ப் கூறுவது உண்மையல்ல” என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது.
இப்போது உலக நாடுகள் கேட்கும் முதல் கேள்வி என்னவென்றால்…உண்மையைச் சொல்வது யார்?
ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான். இரு தரப்பும் நேருக்கு நேர் முரண்பட்ட தகவல்களை வெளியிடுகின்றன. இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, கடந்த சில மாதங்களில் என்னென்ன நடந்தது என்பதை முதலில் பார்த்தரலாம்..
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்த பிறகு, வளைகுடா பகுதியில் நிலைமை மோசமடைந்தது. அதன் தாக்கம் வெறும் ராணுவத்திலோ அரசியலிலோ மட்டும் இல்லாமல், உலக பொருளாதாரத்திலும் தெரிந்தது.
ஏனெனில், உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி இந்த மோதலின் மையமாக மாறியது. உலகில் கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் குறிப்பிடத்தக்க பகுதி இந்த நீர்வழியாகத்தான் செல்கிறது. அந்த பாதையில் பிரச்சினை ஏற்பட்டாலே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வது வழக்கம்.
இதன் தாக்கம் இந்தியாவையும் நேரடியாகத் தொடும். ஏனெனில், இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக பெருமளவில் இறக்குமதியை நம்பியுள்ளது. போக்குவரத்து செலவு அதிகரித்தால், அதன் தாக்கம் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் எரிவாயு என பல துறைகளில் உணரப்படும்.
இந்தச் சூழலில், அமெரிக்கா புதிய தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தது. டிரம்ப் கூறியதில்,
மத்திய கிழக்கு நாடுகள் அமைதியை விரும்புகின்றன. உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்ததாக அவர் விளக்கமளித்தார்.
அதே நேரத்தில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியாகின. வளைகுடா பகுதியில் போர் நீடித்தால், எண்ணெய் உற்பத்தி மட்டுமல்ல, உலக வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் தீவிரமானதாக கூறப்படுகிறது.ஆனால்…
இங்கேதான் கதையில் மிகப்பெரிய திருப்பம் வருகிறது. டிரம்ப் அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்று கூறிய நிலையில், ஈரான் அதனை முழுமையாக மறுத்துள்ளது.
“எந்த உடன்பாடும் இல்லை.” “தாக்குதலை நிறுத்துங்கள் என்று நாங்கள் அமெரிக்காவிடம் கேட்கவில்லை.” “எங்கள்மீது தாக்குதல் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படாது.”
“தேவைப்பட்டால் பதிலடி கொடுக்க எங்கள் ஆயுதப்படைகள் முழு தயார்நிலையில் உள்ளன.”
என்ற கடுமையான நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது.
இதனால், உலக சந்தைகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இப்போது மிக முக்கியமான கேள்வி… ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? இது வெறும் கடல் வழித்தடம் அல்ல. உலக பொருளாதாரத்தின் முக்கிய நரம்புகளில் ஒன்று. இந்த வழி இயல்பு நிலைக்கு திரும்பினால், கப்பல் போக்குவரத்து சீராகும். காப்பீட்டு செலவுகள் குறையும். கச்சா எண்ணெய் விலையும் கட்டுக்குள் வர வாய்ப்பு உருவாகும்.
ஆனால், மோதல் நீடித்தால் அதற்கு நேர்மாறான விளைவுகளும் ஏற்படலாம். இங்கே இன்னொரு அரசியல் கேள்வியும் எழுகிறது. டிரம்ப் ஏன் திடீரென தாக்குதலை நிறுத்தினார்? இது உண்மையிலேயே அமைதிக்கான முயற்சியா? அல்லது சர்வதேச அழுத்தத்தால் எடுத்த அரசியல் முடிவா? பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால்,
மத்திய கிழக்கில் நீண்ட கால போர் நீடித்தால், அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சுமை அதிகரிக்கும். எண்ணெய் விலை உயர்வது உலக சந்தைகளை பாதிக்கும். அதன் விளைவாக அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படலாம்.
இதனால், தற்காலிக இடைவேளை எடுத்து பேச்சுவார்த்தை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பை சிலர் பார்க்கின்றனர். மற்றொரு தரப்பு வேறு கருத்தை முன்வைக்கிறது. ஈரான் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பதாக கூறியுள்ளதால், எதிர்காலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பும் நிராகரிக்க முடியாது.
இந்த நிலையில் இந்தியாவின் கவலை என்ன? ஒரே கேள்விதான்… பெட்ரோல், டீசல் விலை குறையுமா? இதற்கு இப்போதே உறுதியான பதில் சொல்ல முடியாது. ஏனெனில், ஒரு அரசியல் அறிவிப்பு மட்டும் போதாது. கடல் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் நம்பிக்கை மீண்டும் உருவாக வேண்டும்.
அதற்குப் பிறகுதான் எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை உருவாகும்.ஆக… டிரம்ப் கூறும் தகவலையும், ஈரான் வெளியிடும் மறுப்பையும் பார்க்கும்போது, உண்மையில் அமைதி ஒப்பந்தம் உருவாகிறதா அல்லது இது ஒரு அரசியல் நகர்வா என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? உலக எண்ணெய் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பதற்கான பதில் அடுத்த சில நாட்களில் தெரியவரும். இதுபோன்ற உலக நாடுகளின் போர் குறித்தான முக்கிய அப்டேட்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள எப்பொழுதும் இணைந்திருங்கள். ஜெம் தொலைக்காட்சியோடு.!



