
பொங்கல் திருநாள் நெருங்குவதையொட்டித் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கிளிமங்கலத்தில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளில் முக்கியமான சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கு அச்சுவெல்லம், மண்டை வெல்லம் ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதற்கான தேவை ஆண்டு முழுவதும் இருந்தாலும் பொங்கல் திருநாளையொட்டி அதிகமாக இருக்கும். அதைக் கருத்திற்கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கிளிமங்கலத்தில் 10 இடங்களில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணி ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் தயாரிக்கும் நாட்டு வெல்லம் சுவை மிகுந்திருப்பதால் மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், காட்டுமன்னார்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வெல்லம் தயாரிப்பு இரவு பகலாக மும்முரமாக நடந்து வருகிறது.
qநன்கு விளைந்த கரும்புகளை இயந்திரங்கள் மூலம் பிழிந்து சாறு எடுக்கின்றனர். பிழிந்தெடுத்த கரும்பு சாற்றைப் பெரிய இரும்புப் பாத்திரங்களில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்க்கின்றனர். சாறு கொதிக்கும் போது நுரையை நீக்கிப் பாகு பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து காய்க்கின்றனர்.
பாகு சரியான பதத்திற்கு வந்ததும், அதில் செம்பருத்திப் பூ, சுக்கு, தேங்காய் எண்ணெய் கொஞ்சம் சேர்த்துக் கசடுகளை நீக்கி, வெல்லத்தின் நிறத்தையும் சுவையையும் மேம்படுத்துகின்றனர். பாகு உறையும் பதத்துக்கு வரும்போது பெரிய மரத் தட்டில் ஊற்றி உருண்டையாகப் பிடிக்கின்றனர். நாட்டு வெல்லம் நன்றாகக் காய்ந்தபின் சந்தைக்கு அனுப்புகின்றனர்.
நூறு கிலோ வெல்லம் தயாரிக்க 750 கிலோ கரும்பு தேவைப்படுதாகவும், ஒரு கிலோ வெல்லம் 72 ரூபாய்க்கு விலைபோவதாகவும் நாட்டுவெல்லத் தயாரிப்பாளர் ஆனந்த் தெரிவித்தார்.

