பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக சீமான் தெரிவிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் அளிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி வழக்கில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகார வர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்ததாகச் சீமான் தெரிவித்துள்ளார்.

அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துணைநின்ற அதிமுக, இன்றைக்குத் தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானது எனச் சீமான் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், அதிகாரப் புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *