
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதைக் கண்டித்துப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிற்பேட்டையின் சுற்றுப்பகுதிகளில், அவர்கள் குடும்பத்துடன் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயதுப் பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர்.
அப்போது, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்கள் சிலர், முட்புதரில் பச்சிளம் குழந்தை காயங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தன் பின்னர், குழந்தையை மீட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுமி சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே முட்புதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கொடூரச் செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து அடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




