அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து.!

தீபாவளித் திருநாளையொட்டி மக்களுக்குத் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீமையை அழித்து நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தர்மத்தின் ஒளியைப் படரச் செய்யும் ஆசையும் ஆர்வமும் அனைவரிடமும் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். உலகத் தரமிக்க பட்டாசுகள் சிவகாசியில் கிடைக்கும்போது பிற நாட்டு வெடிகளில் காசை ஏன் வீணாக்க வேண்டும்? என்று வினவியுள்ளார்.

நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசின் ஒளியும் சிவகாசித் தொழிலாளர்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள வறுமையைப் போக்கக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அதர்மத்தை அழித்து, தர்மம் வென்றதை உலகுக்கு உணர்த்தும் தீபாவளித் திருநாளில் நாம் ஏற்றும் ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! என்று தெரிவித்துள்ளார். தீபஒளித் திருநாளைத் தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *